ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட பிரபாஸின் சாஹோ, தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலியைத் தொடர்ந்து பிரபாஸ் நாயகனாக நடிக்கும் சாஹோ படம், பாகுபலியை போலவே பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் தரத்திற்கு இணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும், காதல் சைக்கோ என்ற பாடலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும்போது, “நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம். மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தினால் தமிழில் அதே தேதியில் வெளியாகும் ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் ஒப்பனிங் பாதிக்கப்படலாம் என திரையுலகினர் கருதியிருந்தனர். தற்போது சாஹோ தள்ளிப்போவதால், ஆகஸ்ட் 30-ல் தமிழ், தெலுங்கில் வெளியாகும் சூர்யாவின் காப்பானுடன் மோதவுள்ளது. இரு மொழிகளிலுமே சூர்யா, பிரபாஸ் ஆகியோருக்கு நல்ல மார்கெட் இருக்கும் நிலையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
சுஜித் இயக்கியுள்ள சாஹோ படத்தில் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தனிஷ்க் பக்ஷி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மதி, படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத், கலை சாபு சிரில் என முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”