நம் வார்த்தைகளை உணர்வாக மாற்றி வெளிப்படுத்த ஸ்மைலிகளைக் கொடுத்து, நவீன காலத்துக்கான உலகின் பொதுமொழியை கண்டுபிடித்த ஈமோஜி தினம் இன்று.
மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். மொழி எப்போது உருவானது என்பது பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்தாலும், அவரவர்களின் கலாச்சாரத்தைப் பொறுத்து மொழிக்கான தன்மை, சப்தங்கள், பயன்பாடு ஆகியவை மாறும். சைகை மொழியே ஆரம்பகால மனிதர்களின் பொது மொழியாக கருதப்படுகிறது. ஆதியில் பயன்படுத்திய எண்ணற்ற சைகை மொழிகளை இன்றைய நவீன காலத்திலும் நமது உடல் தன்னையறியாமல் வெளிப்படுத்தி வருகிறது என்றால் நம்பமுடிகிறதா?
ஒரு சுவாரஸ்யமான உதாரணம்..ஆதி மனிதன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு புது இடத்திற்கு செல்லும் போது, புது மனிதர்களைக் கண்டவுடனேயே முதலில் இன்றைய 21ஆம் நூற்றாண்டு மனிதன் போலவே தான் ‘ஹாய்’ சொல்லியிருக்கிறான். அதன் அர்த்தம், என்னிடம் ஆயுதங்கள் இல்லை, நான் போர் புரிய வரவில்லை, என்னால் உனக்கு ஆபத்தில்லை, நான் இங்கிருக்கிறேன் என இவற்றில் ஒன்றைக் குறிப்பிடும் அந்த உடல் மொழியைத் தான் இன்றும் நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.
ஒவ்வொரு உடல் மொழிக்கும், வார்த்தைக்கும், சொல்லுக்கும், ஒலிக்கும் ஒரு நெடும் வரலாறு உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஈமோஜியின் வரலாறு என்ன? ஈமோஜி என்பது *படம்*+ *எழுத்து* என்பதற்கான ஜப்பானிய சொற்களின் கலவையாகும். முகபாவங்கள், பொதுவான பொருள்கள், இடங்கள் மற்றும் வானிலை வகைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஈமோஜிகள் உள்ளன. ஈமோஜியின் கதை ஜப்பானில் தொண்ணூறுகளில் தொடங்கியது. ஜப்பானின் *டொகோமோ* மொபைல் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநரும் பணியாளருமான ஷிகேடகா குரிதா தான் இதன் தந்தை என போற்றப்படுகிறார்.இவர் வானிலை முன்னறிவிப்புகளிலிருந்தும், மங்கா என்ற காமிக்ஸிலிருந்தும் உத்வேகம் பெற்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் ஈமோஜி வசதி கொண்ட மொபைல் போன்கள் அதிக விலைகொண்டதாக இருந்ததால் பரவலான கவனத்தைப் பெறாமல் போனது. அதன் பின், விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் போன்ற சாஃப்ட்வேர்கள் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததும் மக்களின் வார்த்தை பயன்பாடே மாறவும் தொடங்கியது. வார்த்தைகளை பயன்படுத்தும் இடத்தில் ஒரு ஸ்மைலி, ஐ லவ் யூக்கு பதில் ஒரு ஹார்டின், கோபத்துக்கு ஒரு சிவப்பு ஸ்மைலி, சிரிக்க, சிந்திக்க, சாப்பிட, முடி வெட்ட, செல்லமாக மிரட்ட, சண்டையிட என ஈமோஜி நம் மொழிப் பயன்பாட்டை சுருக்கவும் செய்தது, அதே சமயம் அதை கிரியேட்டிவாக வெளிப்படுத்தவும் கற்றுக் கொடுத்தது.
முன்னேற்றம் ஒருபுறம் இருக்க, ஈமோஜிகள் குழந்தைகளின் சரியாக எழுதும் திறனை அழித்துவிடும் என்ற கருத்தும் உள்ளது. மேலும் தொடர்ச்சியான அதன் பயன்பாடு நம் அனைவரையும் மந்தமாக்கும் என மொழி வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
�,