இதற்கு முடிவே இல்லையா? : 22 மீனவர்கள் கைது!

public

எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கைக்கு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மீனவர்கள் கைதுக்கு தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் இலங்கை அரசு தொடர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
நாகை கீச்சாங்குப்பம் சேவாபாரதி குடியிருப்பைச் சேர்ந்த சிவா(34) என்பவருக்கு சொந்தமான விசைபடகில் ஒன்பது மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இவர்கள் காங்கேசன் துறை கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி ஒன்பது மீனவர்களையும் கைது செய்தனர்.

அதுபோன்று பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நேற்று மட்டும் மொத்தமாக இரண்டு விசைப்படகுகளையும், 22 மீனவர்களையும் இலங்கை அரசு சிறைபிடித்துள்ளது. தொடர்ந்து இவர்கள் யாழ்ப்பாணம் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை அரசுடன் பேசி இந்திய வெளியுறவு அமைச்சகம் மீட்கிறது. ஆனால், படகுகளை மீட்க முடியவில்லை.

அதனால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த நிலைக்கு முடிவு கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 51 தமிழக மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக மீட்கப்பட வேண்டும். இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரு தரப்பு மீனவர்கள் பேச்சுகளை தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


இதற்கு முன்னதாக, நேற்று(பிப்ரவரி 23) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், “கடந்த 30 நாட்களில் நடைபெற்ற 4 சம்பவங்களில் 7 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டு தமிழ்நாட்டைச் சார்ந்த 47 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் உள்ள, பாக் வளைகுடா பகுதியில் பாரம்பரிய மீன்படித் தளங்களை நம்பியுள்ள ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று தாக்குதல் நடத்துவதும் ,அவர்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்குமான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கும் ஏதுவாக இப்பிரச்சினை குறித்து இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் உள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இன்று வரை இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 29 மீனவர்களும், 82 மீன் பிடி படகுகளும் உள்ளன. எனவே இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் மற்றும் அவர்களது உடைமைகளை விரைவில் விடுவிக்க,அரசு இவ்விவகாரத்தில் அவசரமாகத் தலையிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.