உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே வெட்டப்பட்ட மரங்கள்!

Published On:

| By Balaji

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 2,141 மரங்களை வெட்டி சாய்த்துள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 2,185 மரங்கள் இருந்தன. பசுஞ்சோலையாக இருந்த ஆரே பகுதியில் கட்டுமான பணிகளுக்காக அரசே 2,000க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டலாமா எனக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மரங்களை வெட்டக் கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 29 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த நிலையில் மரங்களை வெட்டத் தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இடைக்காலத் தடையும் பெறப்பட்டது. உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகு மரங்களை வெட்டும் பணியை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆனாலும் தடை விதிப்பதற்கு முன்பே 97 விழுக்காடு மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.

வெட்டி சாய்க்கப்பட்ட மரங்களை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்து மும்பை மெட்ரோ ரயில்வே நிர்வாக அதிகாரி ஒருவர் நேற்று (அக்டோபர் 7) டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசுகையில், “உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். மேற்கொண்டு புதிதாக மரங்கள் வெட்டப்படவில்லை. வெட்டிய மரங்களை அகற்றும் பணியில் மட்டும்தான் ஈடுபட்டுள்ளோம். அக்டோபர் 4ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவைப் பின்பற்றி மரங்களை வெட்ட உரிய அனுமதி பெற்று அக்டோபர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் 2,141 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது” என்றார்.

மும்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதுவரை 23,846 மரக்கன்றுகளை நட்டுள்ளது என்ற அவர், மேற்கொண்டு 25,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாகவும் கூறினார். கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே 6 மாதமாகத் தாமதமாகி வரும் நிலையில், தற்போது மேலும் தாமதமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share