வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ளச் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என 209 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக தலைமை இன்று நியமித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூரில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு, திமுக, அதிமுக, நாம் தமிழர் என மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் நாளை மறுநாள் தேர்தல் பணிக்காக வேலூருக்கு படையெடுக்கவுள்ளனர்.
முன்னதாக ஜூலை 10ஆம் தேதி தொகுதிவாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. 71 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் குழு நியமிக்கப்பட்டது. டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மற்றும் வேலூர் மாவட்டச் செயலாளர்களான ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ் செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே திமுக பொருளாளர் துரைமுருகன், வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் நிற்கிறார் என்று பார்க்காதீர்கள். ஒரு ‘திமுக’காரர் நிற்கிறார், கட்சியின் ஊழியர் நிற்கிறார் என்று பார்த்து வேலை செய்து கதிர் ஆனந்தை வெற்றிபெற வையுங்கள்” என்று திமுகவினரிடம் வலியுறுத்தி வருகிறார்.
இந்த சூழலில், வேலூரில் வெற்றி பெற திமுகவை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக அதாவது, 209 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக இன்று நியமித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குத் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , குடியாத்தம் தொகுதிக்கு ஆர். வைத்திலிங்கம், எம்.பி, மின்துறை அமைச்சர் தங்கமணி ,வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வாணியம்பாடி தொகுதிக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தலைமையில் மொத்தம் 209 பேர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்,
இவர்கள் அனைவரும் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து திங்கள் கிழமை முதல் தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும் என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”