புது மஞ்சள் வரத்து அதிகரிப்பு: சரிந்த மஞ்சள் விலை!

public

ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு புது மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால் மஞ்சள் குவிண்டால் விலை 7,000 ரூபாயாக சரிந்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி மாதம் மஞ்சள் அறுவடை பணிகள் தொடங்குவது வாடிக்கை. அறுவடை முடிந்து மஞ்சள் பாலிஷ் செய்யப்பட்டு மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். புது மஞ்சள் வரத்து இருக்கும்போது பழைய மஞ்சளுக்கான விலையானது குறைவாகவே இருக்கும். மார்க்கெட்டுகளுக்கு புது மஞ்சள் வரத்து குறைந்தால் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ள பழைய மஞ்சளுக்கான விலை உயரும்.
இதுகுறித்து பேசியுள்ள ஈரோடு மஞ்சள் வணிகர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, “ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கடந்த மாதம் வரை புதிய மஞ்சள் வரத்து அதிக அளவில் இருந்தது. இதனால் பழைய மஞ்சள் விலை உயராமல் இருந்து வந்தது. இந்த ஆண்டு சீசன் தொடங்கிய நேரத்தில் ஈரோடு மார்க்கெட்டுகளில் மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.9,500 வரை விற்பனையானது. அதன்பின் விலை சரிந்து தற்போது ரூ.7,000 வரை விற்பனையாகிறது.
வட மாநிலங்களில் பஸ்மத், நாந்தேட், ஹிங்கோலி, மராத்வாடா பகுதியில் உற்பத்தியாகும் மஞ்சள், வட மாநிலத்தின் மஞ்சள் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. எனவே தமிழக மஞ்சள் வட மாநிலங்களுக்கு செல்வது குறைந்து விட்டது. தற்போது புது மஞ்சள் வரத்து குறைந்து வருவதால் வரும் மாதங்களில் பழைய மஞ்சள் விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், அதே வேளையில் மஞ்சள் தேவையானது சர்வதேச அளவில் குறைந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது’’ என தெரிவித்தார்.
இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு புது மஞ்சளுக்கான வரத்து மெல்ல குறைந்து வருவதாகவும் இந்த மாதம் இறுதிக்குள் புது மஞ்சள் வரத்து நின்றுவிடும் என்பதால் பழைய மஞ்சள் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் அதே வேளையில் சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக மஞ்சளின் தேவை குறைந்துள்ளதால் விலை உயருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்றும் அங்குள்ள வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *