மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 ஜுன் 2022

சிங்கப்பூரில் பணியிட விபத்து: இந்திய தொழிலாளி மரணம்!

சிங்கப்பூரில் பணியிட விபத்து: இந்திய தொழிலாளி மரணம்!

சிங்கப்பூரில் ஒரு கட்டுமான தளத்தில் நடந்த பணியிட விபத்தில் மொபைல் கிரேன் விழுந்து 32 வயதான இந்திய தொழிலாளி நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று 10.15 அளவில் நடந்தது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சிங்கப்பூரில் இந்த வருட பணியிட விபத்துகளின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. கொரொனாவிலிருந்து மீண்டு பொருளாதாரத்தை மீட்கவும், சமூக பணிகளை தொடரவும் சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மொத்தம் 37 பணியிட மரணங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இந்த இந்த வருடத்தின் முதல் பாதியிலேயே 27 பணியிட மரணங்கள் நடைபெற்றிருப்பது, பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கவலை எழுப்புவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

ஹ்வா யாங் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரியும் இந்த இந்தியத் தொழிலாளி, மொபைல் கிரேனுக்கு அடியில் இருந்து சில கட்டுமான கருவிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மொபைல் கிரேன் அவர் மீது விழுந்தது. அவரது மார்பக பக்கத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவர் உடனே அருகிலிருக்கும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் பெயரை தற்பொழுது வரை வெளியிடவில்லை.

இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கூறுகையில், "இதுபோன்ற பணியிட மரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இது யாருடைய அலட்சியத்தால் நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பணியிட மரணங்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. கொரோனாவுக்கு பிறகு தற்போது தான் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், இதுபோன்ற பணியிட மரணங்கள் நிகழ்வது பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக இல்லாததை குறிப்பிடுகிறது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

வியாழன் 23 ஜுன் 2022