கிச்சன் கீர்த்தனா: முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி

பருமனைக் குறைத்து, ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் பருப்பு வகைகள், பயறு, பட்டாணி போன்ற குறைந்த கலோரி கொண்ட உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு இந்த முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி பெஸ்ட் சாய்ஸ்.
என்ன தேவை?
துருவிய முட்டைகோஸ் - இரண்டு கப்
பச்சைப்பட்டாணி - கால் கப்
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க...
வெங்காயம் - ஒன்று
துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்
பூண்டு பற்கள் - மூன்று
காய்ந்த மிளகாய் - இரண்டு
தக்காளி - ஒன்று
மிளகு - நான்கு
கிராம்பு - இரண்டு
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - கால் டீஸ்பூன்
தனியா (மல்லி) - கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் கிராம்பு, பட்டை, சோம்பு, மிளகு, தனியா (மல்லி) சேர்த்து லேசாக வறுக்கவும். அவற்றுடன் துருவிய இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பின்பு இவற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதில் பச்சைப்பட்டாணி மற்றும் துருவிய கோஸ் சேர்த்து நன்கு புரட்டிக் கொள்ளவும். அதில் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும். முட்டைகோஸ், பட்டாணி நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து எலுமிச்சைச்சாறு கலந்து இறக்கவும்.