மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 ஜுன் 2022

தேங்கி கிடக்கும் தேங்காய்கள்: விவசாயிகள் கோரிக்கை!

தேங்கி கிடக்கும் தேங்காய்கள்: விவசாயிகள் கோரிக்கை!

விளைச்சல் அதிகரித்ததால் தஞ்சை மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தோப்புகளில் ஏராளமான தேங்காய்கள் தேங்கி கிடக்கின்றன. இதை சரிசெய்ய அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளும், இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகமும் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக டெல்டா விவசாயிகளின் இரண்டாவது மிகப் பெரிய வாழ்வாதாரமாக விளங்கிவரும் தென்னை சுமார் 60,000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் விளையும் தேங்காய்கள் அதன் அளவு, சுவை, மனம் போன்றவைகள் மூலம் உலக அளவில் சிறப்பு பெற்றுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் சிறப்பு பெற்ற இந்தப் பகுதி தேங்காய்களை புகழ்பெற்ற பிஸ்கட் கம்பெனிகள், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்பி வாங்கி செல்வார்கள்.

தஞ்சை மாவட்ட தென்னை விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமான தேங்காய் வருமானம், கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் முடங்கி போனது. சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் ஒன்றரை லட்சம் தென்னைகளை இழந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேங்காய் மூலம் வருவாயின்றி விவசாயிகள் தடுமாறி வந்தனர்.

தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விளைச்சல் அதிகரிக்க தொடங்கி பொருளாதார இழப்பில் இருந்து மீண்டு வந்தனர். இந்த நிலையில் கேரளா போன்ற வெளிமாநிலங்களிலும், திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சியிலும் இதேபோல் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் இந்தப் பகுதியில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தேங்காய் அனுப்பி வைப்பது நின்று போய் விட்டது.

இதனால் வாங்கிய தேங்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகளும், விளைந்த தேங்காயை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் இருந்து நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக சென்னை, காங்கேயம், வெள்ளக்கோவில் போன்ற பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் கொண்டு செல்லப்படும்.

ஆனால், தற்போது இங்கிருந்து கொண்டு செல்வது நின்று விட்டது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ.30-க்கு விற்கப்பட்ட தேங்காய் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 20 ரூபாயாக குறைந்தது. தற்போது விற்பனையின்றி விலை சரிந்து ஒரு தேங்காய் 8 ரூபாய் முதல் 9 ரூபாயாக உள்ளது.

இதனால் வெட்டிய தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் தோப்புகளிலும், தேங்காய் வெட்டாமல் மரங்களிலும் தேங்கி கிடக்கிறது.

இதனால் தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், தேங்காய் வெட்டும் தொழிலாளர்கள், கொப்பரை காய வைப்போர் உட்பட பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சினைக்கு ஒரே வழி தேங்காய் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 20 ஜுன் 2022