மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 ஜுன் 2022

மண்ணுக்கும் ஊட்டச்சத்துக்கும் உள்ள தொடர்பு எப்படிப் பட்டது?

மண்ணுக்கும் ஊட்டச்சத்துக்கும் உள்ள தொடர்பு எப்படிப் பட்டது?

சத்குரு: ஒருமுறை இப்படி நடந்தது. சிவ பக்தனான விவசாயி ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவருடைய விளைச்சல் மோசமாக இருந்தது. உடனே அவர் சிவனை மிகத் தீவிரமாக அழைக்க, சிவனும் அவர் முன்னே தோன்றினார்.

அந்த விவசாயி சிவனைப் பார்த்து “உனக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் நீ மழையை நிர்வகிக்கிறாய், சூரிய வெளிச்சத்தை நிர்வகிக்கிறாய், எனக்கு மோசமான விளைச்சல் கிடைக்கிறது. இது சரியல்ல. இதெல்லாம் உன் வேலையுமல்ல. இதை நீ என் கைகளில் விட்டுவிட்டால் நான் அவற்றை நன்றாக செய்வேன், நான் ஒரு சிறந்த விவசாயியாகவும் இருப்பேன்“ என்றார்.

சிவனும் “ஆகட்டும், நீயே மழை, சூரிய வெளிச்சம் எல்லாவற்றையும் நிர்வகித்துக்கொள்” என்றார்

அடுத்த பருவத்தில் அந்த விவசாயி நிலத்தை உழுது, விதையிட்டு, “மழை” என்றார். மழை வந்தது. பத்து நிமிடத்தில் மண் நன்றாக நனைந்து விட்டது. அவர் “நிறுத்து” என்றதும் மழை நின்று விட்டது. பின்னர் அவர் “சூரிய வெளிச்சம்” என்றார், சூரிய வெளிச்சம் வந்தது. “வெளிச்சம் அதிகமாக உள்ளது - குறைத்துக் கொள்ளலாம்” என்றதும் சூரிய ஒளி குறைந்தது. அவர் அவற்றை ஒரு ரிமோட் ஸ்விட்ச் போல நிர்வகித்தார். மக்காச்சோளப் பயிர் நன்றாக பசுமையாக, கெட்டியாக வளர்ந்தது. மக்காச்சோள கதிர்களைப் பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

மக்காச்சோளத்தைப் பயிரிடும் விவசாயிகளிடம் உள்ள பழக்கத்தின்படி. சோளம் நன்கு விளைந்ததும் கதிர்களைத் திறந்து, உள்ளே தானியம் எப்படி விளைந்துள்ளது என்று பார்த்தார். கதிர்கள் திடமாக விளைந்துள்ளதையும், பயிர்கள் எப்போதையும் விட நன்றாக உயரமாக வளர்ந்துள்ளதையும் கண்டார். ஆனால் கதிர்களுக்குள் சோளம் எதுவும் இல்லை.

பிறகு, கோபத்தோடு சிவனை அவர் மீண்டும் அழைத்தார். சிவனும் வந்தார். “என்ன செய்திருக்கிறாய் சிவா?” என்று கேட்டார்.

“நான் என்ன செய்தேன்? எல்லாவற்றையும்தான் நான் உன் கையில் விட்டுவிட்டேனே?

“ஆமாம், மழை, சூரிய வெளிச்சம் எல்லாம் சரியான நேரத்தில் நிகழ்ந்தன. பயிர்களும் நன்றாக விளைந்தன. ஆனால், மக்காச்சோளம் ஏன் இல்லை?

அதற்கு சிவன் "நான் மழையை மட்டும் கொண்டு வர மாட்டேன், அந்த நிலம் சற்று வறண்டுபோகும்படி செய்து, வேர்கள் நீரைத்தேடி இன்னும் ஆழமாக செல்ல வைப்பேன். காற்றை வேகமாக வீசச்செய்து பயிர்களுக்கு சிறிது அழுத்தம் கொடுத்து, அதன் வேர்கள் நன்றாக ஊன்றச் செய்வேன். இதனால் கதிர்களுக்குள் தானிய மணிகள் உருவாகும். ஆனால் இப்போதோ நீ அனைத்து பயிர்களையும் உன் செல்லப் பிராணி போல வளர்த்தாய். அவையும் அழகாக வளர்ந்துள்ளன, ஆனால் தானிய மணிகள் உருவாகவில்லை. நான் என்ன செய்யட்டும்?”என்றார்

ஊட்டச்சத்து குறைபாடு

காலப்போக்கில், நம்முடைய விவசாயமும் இதைப்போலத்தான் ஆகி விட்டது. நம்மிடத்தில் எல்லாம் இருக்கிறது, ஊட்டச்சத்தைத் தவிர. உலகின் அனைத்து பகுதிகளிலும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது மிகவும் கணிசமாக உள்ளது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இது மிகவும் வருத்தத்திற்குரியது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான மையம் (CENTER FOR DISEASE CONTROL AND PREVENTION–CDC) நடத்திய ஆய்வில், அனைத்து அமெரிக்கர்களும் பொட்டசியம் குறைபாடு உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 90 சதவீதம் பேர், வைட்டமின் E குறைபாடு உள்ளவர்களாகவும், 70சதவீதம் பேர் வைட்டமின் K குறைபாடு உள்ளவர்களாகவும், 45 சதவீதம் பேர் மக்னீசியம் குறைபாடு உள்ளவர்களாகவும், 43 சதவீதம் பேர் வைட்டமின் A குறைபாடு உள்ளவர்களாகவும், 39 சதவீதம் பேர் வைட்டமின் C குறைபாடு உள்ளவர்களாகவும் உள்ளனர். இது மிகவும் வசதி படைத்த நாட்டின் நிலைமை!

நீங்கள் தேவையான அளவு உணவை எடுத்துக் கொண்டாலும், அதில் போதுமான ஊட்டச்சத்து இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. ஏனென்றால், மண் பாழாக்கப்பட்டுவிட்டது.

27,000 நுண்ணுயிரி இனங்களின் அழிவு

ஒரு கையளவு மண்ணில் 500 முதல் 700 கோடி உயிரினங்கள் உள்ளன. இந்த நுண்ணுயிரிகள் மூலம்தான் இந்த பூமியில் மற்ற உயிரினங்கள் பரிணமித்து உள்ளன. இந்த நுண்ணுயிரிகள் அழிந்தால் நாமும் அழிந்து போவோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும், தோராயமாக, மண்ணை உறைவிடமாக கொண்டு வாழும் 27000 நுண்ணுயிரி இனங்கள் அழிந்துகொண்டு இருக்கின்றன. மனித இனமும், மற்ற உயிர்களும் அதற்கு ஒரு பெரும் விலையை கொடுத்துக் கொண்டு உள்ளன.

மண்ணை நாம் மீட்டெடுக்க விரும்பினால், மண் உயிருள்ள ஒன்று,இறந்த பொருள் அல்ல என்னும் கருத்து மாற்றம் இந்த உலகில் ஏற்பட வேண்டும். இப்போதும் கூட பல வேளாண் விஞ்ஞானிகளும், பல்கலைக்கழகங்களும், வேளாண் துறைகளும் மண்ணை ஒரு பொருளாகத்தான் அழைக்கிறார்கள். அவர்களது அணுகுமுறை எப்படி இருக்கிறது என்றால், “அதற்கு இன்னும் கொஞ்சம் நைட்ரஜன் வேண்டும், இன்னும் கொஞ்சம் பொட்டாசியம் வேண்டும், இன்னும் கொஞ்சம் பாஸ்பரஸ் வேண்டும்” என்றுதான். அப்படி அல்ல, மண்ணிற்கு எது வேண்டும் என்றால் வாழும் உயிரினங்கள் வேண்டும்.

மண்ணை சரியான முறையில் அணுகி சரிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இது பற்றியது தான் மண் காப்போம் இயக்கம்.

விளம்பர பகுதி

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 19 ஜுன் 2022