அதிகரிக்கும் கொரோனா: மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியம்!

சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 476 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 200 ஐ தாண்டி தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய வேண்டும் அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்கள் எவரேனும் இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்" என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
-ராஜ்