அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ போட்டியை இந்திய வம்சாவளி வென்றார்!

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி மோகன் ஸ்பெல்லிங் பீ எனப்படும் ஆங்கில உச்சரிப்பு போட்டியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவில் ஆங்கில வார்த்தைக்கான ஸ்பெல்லிங் கூறும் ஸ்பெல்லிங் பீ எனப்படும் தேசிய அளவு போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதில் உலக அளவில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களில் மிகச் சிறப்பாக விளையாடும் மாணவர்கள் இறுதி சுற்றில் போட்டியிடுவார்கள். இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நடுவர் குழு அளிக்கும் ஆங்கில வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கை சரியாக சொல்ல வேண்டும். பொதுவாகவே இந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் நடுவர் குழு அளிக்கும் ஆங்கில வார்த்தைகள் மிகப் பெரியதாகவும், கடினமாகவும் இருக்கும். சில வார்த்தைகளை கேட்கும்பொழுது இப்படிப்பட்ட வார்த்தைகள் எல்லாம் ஆங்கில மொழியில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழும் ஆனாலும் இந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் மாணவர்கள், அந்த வார்த்தைகளை எளிதாகப் புரிந்து கொண்டு ஸ்பெல்லிங் உச்சரிக்கும் போது வியப்பாக இருக்கும்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியான எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிணி லோகன் என்பவர் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இதில் ஆச்சரிய தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஸ்பெல்லிங் பீ இறுதிப் போட்டியில் இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்றனர், அவர்கள் இருவருமே இந்திய வம்சாவளிகள். ஒருவர் ஹரிணி லோகன், இன்னொருவர் விக்ரம் ராஜு.
இறுதியில் 21 சொற்களுக்கு சரியான ஸ்பெல்லிங்கை சொல்லி ஹரிணி லோகன் முதலிடத்தை தட்டி சென்றார். 15 வார்த்தைகளுக்கு சரியான ஸ்பெல்லிங்கை சொல்லி விக்ரம் ராஜு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.