மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 ஜுன் 2022

விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்த ஆசிரியர்கள்!

விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்த ஆசிரியர்கள்!

சேலத்தில் விருப்பமான மையங்களை ஒதுக்காததால் ப்ளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் விடைத்தாள் திருத்தும் பணி பாதியில் நின்றது.

தமிழகம் முழுவதும் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து ப்ளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் சேலம், நெய்க்காரப்பட்டி, ஆத்தூர், தாரமங்கலம் என நான்கு மையங்களில் ப்ளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், சேலம் ராஜாஜி சாலையில் உள்ள சாரதா பாலமந்திர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்கு ப்ளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று காலையில் வந்தனர். பின்னர் அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விருப்பமான மையங்களை ஒதுக்கவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், "வழக்கமாக பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில்தான் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் இந்தாண்டு வழக்கமான முறையில் மாற்றம் செய்ததால் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ள மையங்களுக்கு வர வேண்டியுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வேறு வழியின்றி ப்ளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை நாங்கள் புறக்கணிப்பு செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

ஆசிரியர்களின் போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணி சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மதியத்துக்குப் பின்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

சேலத்தில் ப்ளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சேலத்தை தொடர்ந்து ஆத்தூர், நெய்க்காரப்பட்டி, தாரமங்கலத்தில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் ப்ளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொடங்கினர்.

-ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 3 ஜுன் 2022