சாலை பணியை விரைந்து முடிக்க சாலை மறியல்!


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் பைபாஸ் சாலையிலிருந்து கீழநம்மங்குறிச்சி - பெத்தவேளாண்கோட்டகம் வரை சாலை உள்ளது. இந்தச் சாலை கடந்த ஒன்பது ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இதைச் சீரமைக்க கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கியது. ஆனால், பணிகள் இதுவரை நிறைவுபெறாமல் தாமதமாக நடைபெற்று வருவதால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று முத்துப்பேட்டை செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில், சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, செயற்பொறியாளர் வேதா, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சாலை பணி விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
-ராஜ்