கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் அடை


சிகரெட்டைப் போலவே பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுபோன்று நொறுக்குத் தீனிகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்புச்சத்து போன்றவை அடங்கியிருப்பதால் அவற்றை உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் தொடங்கி புற்றுநோய் வரையான தொற்றாநோய்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க, வீட்டிலேயே இந்த வெஜிடபிள் அடை செய்து ருசிக்கலாம்.
என்ன தேவை?
கடலை மாவு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
கேரட் - ஒன்று (துருவவும்)
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி (தோல் சீவி துருவியது) - ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு அல்லது கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். பின்னர் இந்த மாவில் நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். மாவை சிறுசிறு அடைகளாகத் தோசைக்கல்லில் வார்த்து, எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும்.
குறிப்பு
தண்ணீருக்குப் பதில், தயிர் சேர்த்தும் அடை மாவைத் தயார் செய்யலாம்.