குரங்கு அம்மை உலகம் முழுவதும் பரவ வாய்ப்பில்லை!

உலகம் முழுவதும் இப்போதுதான் கொரோனா சற்று கட்டுக்குள் வந்து இயல்புநிலைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் குரங்கு அம்மை காய்ச்சல் என்று புதிதாக ஒன்று கிளம்பி ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் பரவி வருகிறது. இது கொரோனா போன்று பரவுமா, உலகளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துமா என்று மக்களிடையே அச்சம் எழுகிறது.
நேற்று முன்தினம்தான் இந்த நோய் அயர்லாந்திலும் பரவியது என்று தெரிவிக்கப்பட்டது. இதுவரை உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலும், ஒருவிதமான உடல் சொறியும் அறிகுறிகளாகத் தென்படுகிறது. இது அதிகமாக ஆப்பிரிக்காவில்தான் பரவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து உலக சுகாதார மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது ஆப்பிரிக்காவுக்கு வெளியில் குரங்கு அம்மை நோய் பரவுவதால் இது உலக பரவலுக்கு வழிவகுக்காது. இந்த நோய் அறிகுறிகளைக் காட்டாமல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரவுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தற்போது உலகில் 300க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
மேலும், "இது மிகவும் லேசான ஒரு நோயாகும். இது நெருங்கிய தொடர்பு மூலம் மட்டுமே பரவக்கூடியது. இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் ஒரு தனித்துவமான சொறியையும் ஏற்படுத்துகிறது. இந்த நோய் பொதுவாக பரவும் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை விட சமீபத்தில் பெரும்பாலான வழக்குகள் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன. இந்த நோயினால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. அதேபோல இது கொரோனா போல பயப்பட வேண்டிய நோய் கிடையாது. மேலும் இது அவ்வளவு விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பே இல்லை" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.