மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 மே 2022

மேட்டூர் அணை திறப்பு: வரவேற்பும் எதிர்பார்ப்பும்!

மேட்டூர் அணை திறப்பு: வரவேற்பும் எதிர்பார்ப்பும்!

டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே நாளை (மே 24 - செவ்வாய்க்கிழமை) திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் விதை நெல், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், குறுவை தொகுப்பு திட்டம் குறித்து அறிவிக்கவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில் முன்கூட்டியும் அணை திறக்கப்படும். அதன்படி ஜூன் 12ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை முன்னதாகவே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நாளை (மே 24ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை) திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு விவசாயச் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு விவசாயச் சங்கத்தினர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன்:

“டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசு சரியான நேரத்தில் மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக குறுவை அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகளை வருகிற 30ஆம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரம், விதை நெல் தட்டப்பாடு இல்லாமல் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஜீவக்குமார்:

“தமிழக அரசு நவீன மாற்றத்தைச் சந்திக்க எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே அணை திறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தரமான விதைநெல், உரங்கள் மற்றும் பயிர் சாகுபடிக்கான இடுபொருட்கள், பயிர் சாகுபடிக்கடன் வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து ஏரி, குளங்களையும் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை விமலநாதன்:

“முன்கூட்டியே பாசனத்துக்கு மேட்டூர் அணையை திறக்க அரசு முடிவு எடுத்து இருப்பது மிகச் சிறப்பான ஒன்று. குறுவை அறுவடை காலமான அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நேரத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னதாகவே அணையைத் திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது முன்னதாகவே அணையை திறக்கும் அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.”

தமிழக விவசாயிகள் சங்கச் செயலாளர் சாமி.நடராஜன்:

“மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஒரே நேரத்தில் குறுவை பணிகள் தொடங்கப்பட உள்ளதால், விதை நெல், உரத்தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். குறுகிய கால நெல் விதைகள் வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணை திறந்தாலும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பை ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன்:

“மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கும் அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தற்போது ஆறு, வாய்க்கால், ஏரி, குளங்கள் தூர் வாரும் பணி தொடக்க நிலையிலேயே உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் பணிகளை நிறைவேற்றிட வேண்டும். விவசாயிகள் தயாராக இல்லாத நிலையில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுவதால் உடனடியாக விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்கள், உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

-ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 23 மே 2022