கிச்சன் கீர்த்தனா: கார்ன் கட்லெட்!


பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் காலையில் அவசரமாகவும் மதியம் ஆறிப்போன உணவுகளையும் சாப்பிடும் குழந்தைகள், இப்போது விடுமுறையில் வீட்டில் உள்ள நிலையில் சூடாகவும் சுவைமிகுந்த உணவாகவும் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப சுவை நரம்பை சுண்டியிழுக்கும் உணவு அமைந்துவிட்டால், பரிமாறுபவரைக் கொண்டாடுவார்கள். அதற்கு இந்த கார்ன் கட்லெட் பெஸ்ட் சாய்ஸ்.
என்ன தேவை?
வேகவைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பிரெட் க்ரம்ப்ஸ் (பிரெட் துகள்கள்) - தேவையான அளவு
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் வேகவைத்த ஸ்வீட் கார்ன், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, இரண்டு டேபிள்ஸ்பூன் பிரெட் துகள்கள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். பிறகு இதை சிறிய கட்லெட்டுகளாகச் செய்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
கார்ன்ப்ளாரை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாகக் கரைத்துக்கொள்ளவும். இந்த மாவில் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளைத் தோய்த்து, பிரெட் துகள்களில் புரட்டி எடுக்கவும். பின்னர் இதை எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுக்கவும் அல்லது தோசைக்கல்லில் கட்லெட்டைப் போட்டு அதன் இருபுறம் எண்ணெய்விட்டு வறுத்தும் சாப்பிடலாம்.