மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 மே 2022

நலிவடைந்துவரும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு தொழில்!

நலிவடைந்துவரும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு தொழில்!

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நாச்சியார்கோவிலில் குத்துவிளக்கு தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயமும், விற்பனை சரிய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் தயாராகும் குத்துவிளக்குகள் பிரசித்தி பெற்றவை. இங்கு தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் அனைத்தும் வார்ப்பு முறையில் ஆகம விதிப்படி செய்யப்படுகின்றன. இந்த விளக்குகளைச் செய்யும் கலைஞர்களின் நகாசு வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமானவை. இதன் செய்முறை மற்ற இடங்களில் செய்யப்படும் தயாரிப்புகள் போல் இருக்காது.

காவிரி ஆற்றின் வண்டல் மணலும், களிமண்ணும் இவர்களின் வார்ப்பு தொழிலுக்கு உதவியாக இருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த குத்துவிளக்குகளை தயாரிக்க நாச்சியார்கோவிலில் உள்ள கம்மாளத்தெரு, மேலத்தெரு, அய்யம்பாளையத்தெரு, சமத்தனார்குடி உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன. இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 3,000 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இங்கு ஒரு அடி முதல் ஏழு அடி வரை பல்வேறு வடிவங்களில் பித்தளையால் ஆன குத்துவிளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஆறு அடி உயர குத்துவிளக்குகள் அரசு மற்றும் தனியார் விழாக்களில் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களிலும் நாச்சியார்கோவில் குத்துவிளக்குகளின் விற்பனை அதிகம். மேலும் சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் குத்துவிளக்குகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் குத்துவிளக்குகளின் விலையும் அதிகரித்து விற்பனை பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள குத்துவிளக்குகள் உற்பத்தியாளர் சங்க துணைச் செயலாளர் வெங்கடேஷ். "ஒரு நாளைக்கு 40 முதல் 50 குத்துவிளக்குகள் தயார் செய்ய முடியும். மூலப்பொருட்களின் விலை உயர்வால் தயாரிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை குறைந்தால் குத்துவிளக்கு தயாரிக்கும் பணி நலிவடையாமல் பாதுகாக்க முடியும். மூலப்பொருட்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு உருக்கு பித்தளை ஒரு கிலோ ரூ.300 ஆக இருந்தது. ஆனால், தற்போது ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அதுவும் தங்கத்தை போல் மூலப்பொருட்களின் விலையும் தினமும் மாறுகிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே மூலப்பொருட்களின் விலை நிரந்தரமாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தயாரிக்கும் பணி பாதிக்கப்படுவதுடன் விற்பனையும் சரிய வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.

-ராஜ்-

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 22 மே 2022