அசாம் வெள்ளம்: ரயில் பாதைகளில் வசிக்கும் 500 குடும்பங்கள்!

அசாமில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளகாடாகக் காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
அசாமில் உள்ள சாங்ஜுரை, பாட்டியா பத்தர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் தங்களிடம் இருந்த அனைத்து உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் ஜமுனாமுக் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ரயில் தண்டவாளத்தில் வசித்து வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களாக மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.
இயற்கை பேரழிவால் 29 மாவட்டங்களில் உள்ள 2,585 கிராமங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழைக்கு முந்தைய மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 343 நிவாரண முகாம்களில் 86,772 பேர் தஞ்சமடைந்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
-ராஜ்-