பஸ் நிலையத்தில் பாசிமணி விற்க அனுமதிக்க வேண்டும்!

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பாசிமணி விற்க அனுமதிக்க வேண்டும் என கைக்குழந்தைகளுடன் வந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நரிக்குறவப் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவப் பெண்கள், கைக்குழந்தைகளுடன் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், "தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் கடந்த மூன்று தலைமுறைகளாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் பாசிமணி, ஊசிமணி, சோப்பு, சீப்பு, ஹேர்பின், சோப்பு டப்பா போன்றவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது பழைய பஸ் நிலையம், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ளதால் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த எங்களை பழைய பஸ் நிலையத்தில் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதனால் பிழைப்பு நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். எனவே நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 26 ஏழை தொழிலாளர்களுக்கு பழைய பஸ் நிலையத்தில் பாசிமணி, ஊசிமணி போன்ற பொருட்களை விற்பனை செய்ய உதவி செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளனர்.
-ராஜ்-