மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 மே 2022

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து உலக சுகாதார ‌நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (மே 15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தொற்று மற்றும் தொற்றா நோய்கள் கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று தற்போது 100-க்கு கீழாக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10.22 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் 50 சதவிகிதம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 93.51 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மிகப் பெரிய ஆயுதமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், “தடுப்பூசிகள் உயிரைக் காப்பாற்றாது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதே உயிரைக் காக்கும். தடுப்பூசிகள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் சேமிப்பிலேயே இருப்பதால் எந்தப் பயனும் கிடையாது” என்று உலக சுகாதார ‌நிறுவனத்தின் தடுப்பூசித் துறை இயக்குநர் கேத்ரின் ஓ ப்ரைன் எச்சரித்துள்ளார்.

“தடுப்பூசிகள் போதுமான அளவில் இருந்தாலும் சரியாகத் தடுப்பூசி செலுத்த முடியாததற்கு சில காரணங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால் நேரமின்மைகூட இதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இருப்பிடத்துக்கு அருகில் தடுப்பூசி கிடைக்காமல் நெடுந்தொலைவு சென்று செலுத்திக்கொள்ள வேண்டியிருப்பதும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததற்கு ஒரு காரணம் ஆகும்.

இதுதவிர, தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் ஒரு தயக்கமும் உள்ளது. இப்படித் தடுப்பூசிகளை எதிர்க்கும் நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் எனப் பொய்யான நம்பிக்கை உண்டு. ஆனால், உண்மையில் தடுப்பூசிகளை எதிர்ப்போர் மிகவும் சிலரே. அவர்கள் சில தவறான நம்பிக்கைகளின் அடிப்படையில் எதிர்க்கிறார்கள். இன்னும் சிலர் தடுப்பூசிகள் எப்படி வேலை செய்கின்றன, அவை பாதுகாப்பானவைதானா என்ற பயம் மற்றும் தயக்கத்துடன் அதைத் தவிர்ப்பார்கள்.

உண்மையில் தடுப்பூசிகள் உடலில் இருக்கும் எதிர்ப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டி, இனிவரும் காலங்களில் ஏற்படும் நோய்க்கு எதிராக எதிர்ப்பாற்றல் மண்டலத்தை வலுப்படுத்தும். எந்த நோய்க் கிருமிக்கு எதிராகச் செலுத்தப்படுகிறதோ அந்தக் கிருமியால் வருங்காலத்தில் தாக்கப்பட்டாலும் அதற்கு எதிராக நம் உடலை தயார் நிலையில் வைத்திருக்கும்" என்று உலக சுகாதார ‌நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குநர் மருத்துவர் கேத்ரின் ஓ ப்ரைன் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் "ஜூன் 12ஆம் தேதி, ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்" என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

"தடுப்பூசி போடாதவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு மருத்துவத் துறையும், மற்ற சேவை துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று தமிழக மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

-ராஜ்-

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

திங்கள் 16 மே 2022