மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

ஏற்காட்டில் கோடை விழா: ஏற்பாடுகள் குறித்து கே.என்.நேரு

ஏற்காட்டில் கோடை விழா: ஏற்பாடுகள் குறித்து கே.என்.நேரு

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்குவது தொடர்பான அனைத்து விவரங்களையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கியுள்ளார்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கொரோனா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கோடை விழா நடந்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை தமிழக சுற்றுலாத் துறை தீவிரமாக செய்து வருகிறது.

இதற்கிடையே தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி ஏற்காட்டில் வருகிற 26ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் கோடை விழா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், ஏற்காட்டை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. குறிப்பாக, ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களை கொண்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏழு நாட்களும் மலர் கண்காட்சி மற்றும் மாம்பழக் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.

கோடை விழாவை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வசதியாக சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்குச் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.ஏற்காட்டின் முக்கிய இடங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழும் வகையில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோடை விழாவின்போது ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் சென்று வர போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏற்காட்டுக்குச் செல்லும் போது வழக்கமான சேலம் - ஏற்காடு சாலை வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து திரும்ப வரும் போது ஏற்காட்டில் இருந்து குப்பனூர் சென்று அங்கிருந்து சேலம் வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகள் கோடை விழாவில் இடம்பெறுகிறது. இது தவிர சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தினமும் கலை நிகழ்ச்சிகள், செல்ல பிராணிகள் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் எனப் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

இதற்கிடையே மலர் கண்காட்சியில் எந்தவிதமான மலர் அலங்காரம் செய்யலாம் என கடந்த 10 நாட்களாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டன. சுமார் 1,500 பேர் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். அப்போது பெரும்பாலானவர்கள் மேட்டூர் அணை போன்று மலர்களால் வடிவமைக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் மேட்டூர் அணை போன்று மலர்களால் வடிவமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது தவிர இரண்டு நாட்கள் பழங்கள் கண்காட்சியும், இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சியும் நடத்தலாம் என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

-ராஜ்-

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 15 மே 2022