சென்னைக்கு ஆறாவது குடிநீர் ஆதாரம்: தலைமைச் செயலாளர் ஆய்வு!


சென்னையின் ஆறாவது குடிநீர் ஆதாரமாக அமைய உள்ள ராமஞ்சேரி நீர்த்தேக்கப் பகுதியில் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (மே 11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு சென்னையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டிஎம்சி ஆகும்.
இந்த ஐந்து ஏரிகளிலும் பலத்த மழை பெய்தால் உபரி நீரை சேமித்து வைக்க முடியாமல் திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்தத் தவிர்க்க புதிய நீர்த்தேக்கம் கட்ட நீர்வள ஆதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஆறாவது புதிய ஏரியாக பூண்டி அருகே ராமஞ்சேரியில் 800 ஹெக்டர் நிலப்பரப்பில் 2 டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்கக்கூடிய பிரமாண்ட நீர்த்தேக்கம் கட்ட ரூ.700 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய நீர்த்தேக்கம் அமைய உள்ள பகுதியைத் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் இதற்கான திட்டங்களை வகுக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
-ராஜ்-