மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 மே 2022

ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்: குப்பை வண்டிகளைச் சிறைபிடித்த பொதுமக்கள்!

ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்:  குப்பை வண்டிகளைச்  சிறைபிடித்த பொதுமக்கள்!

திருச்செங்கோடு அருகே ஓடையில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக்கோரி குப்பை வண்டிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செங்கோடு அருகே உள்ளது தேவனாங்குறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கடைகளில் இருந்து பெறப்படும் கோழி, ஆடு மற்றும் மாட்டிறைச்சி கழிவுகள் செரமிட்டான்பாளையத்தில் இருந்து தோக்கவாடி செல்லும் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. மேலும், அங்குள்ள ஏரியின் ஓடைகளிலும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மாசடைந்து நிறம்மாறி காணப்படுவதாகவும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவதால் உடலில் அரிப்பு மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது என்றும் அந்தப் பகுதி மக்கள் பல நாட்களாகக் கூறிவந்தனர். மேலும் ஊராட்சி நிர்வாகத்திடம், சாலையோரத்திலும், ஓடையிலும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டக்கூடாது என்றும், மலைபோல் குவிந்து கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பல முறை வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காத ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அந்தப் பகுதியில் கழிவுகளை கொட்டி வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று (மே 11) கழிவுகளைக் கொட்ட வந்த ஊராட்சி குப்பை வண்டிகளைச் சிறைபிடித்தனர். மேலும் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் வந்து குப்பைகளைக் கொட்ட மாட்டோம் என்று உறுதி அளிக்கும் வரை வாகனங்களை விடமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் ஊராட்சி நிர்வாகத்தினர் வரவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்செங்கோடு - தேவனாங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், சிறைபிடித்த ஊராட்சி குப்பை வண்டிகளையும் சாலையில் நிறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஊராட்சி தலைவர் அருண் அங்கு வந்தார். அவர் தேவனாங்குறிச்சி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 20 நாட்களில் சாலையோரம் மற்றும் ஓடையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர்ப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பரபரப்பு நிலவியது.

-ராஜ்-

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வியாழன் 12 மே 2022