ஆரம்ப சுகாதார நிலையத்தை இரவிலும் திறக்க வேண்டும்!

public

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இரவிலும் திறக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்குச் சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதால், ஏராளமான கிராம மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இங்கு சித்த மருத்துவ பிரிவும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் இரவு நேரங்களில் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் மருத்துவ ஊழியர்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பதில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் பல மாதங்களாகக் கூறிவந்தனர்.
இந்த நிலையில் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இரவிலும் திறக்க வேண்டும். போதிய மருத்துவ ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னம், பெரம்பூர், கீழமாத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. புத்தூரில் இருந்து வடரங்கம் செல்லும் நெடுஞ்சாலையில் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் நடந்த இந்தப் போராட்டம் காரணமாக அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

**-ராஜ்-**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *