மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 மே 2022

சிறப்புக் கட்டுரை: உங்கள் நிலைக்கு யார் பொறுப்பு?

சிறப்புக் கட்டுரை: உங்கள் நிலைக்கு யார் பொறுப்பு?

சத்குரு

வாழ்க்கையில் வெற்றி பெறும்போது அதற்கு தாங்களே பொறுப்பு என கூறும் பலர், தோல்வி வரும்போது அப்படி செய்வதில்லை! அனைத்திற்கும் முழுமையாக பொறுப்பேற்பதால் நிகழும் அற்புத மாற்றம் என்ன என்பதை சத்குரு இங்கே வெளிப்படுத்துகிறார்.

ஒரு டாக்டர் இருந்தார். அவர் புது டாக்டர். அவர் ஏதோ பரிட்சை பாஸ் பண்ணவேண்டும் என்பதற்காக படிக்கவில்லை. ஒரு நல்ல டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காக படித்தார். ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். அவரிடம் ஒரு நோயாளியை அழைத்து வந்தார்கள்.

அந்த நோயாளியின் நிலை எந்த மாதிரி இருந்தது என்றால் இரண்டு நிமிடம் கவனிக்கவில்லை என்றால் உயிர் போய்விடும் என்ற நிலை. அந்த நிலையில் நோயாளியை இந்த புது டாக்டரிடம் அழைத்து வந்தார்கள். நம்ம டாக்டர் எல்லாவற்றையும் கவனமாகப் படித்து என்ன பிரச்சனை என்பதைக் கண்டுபிடித்து அதற்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதையும் செய்தார். அந்த நோயாளி இரண்டு நாட்களில் எழுந்து உட்கார்ந்து விட்டார். ஒரு வாரத்தில் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்.

“அவர் இறக்கும் தருவாயில் இருந்தார், வேற எந்த டாக்டரிடம் போயிருந்தாலும் இறந்திருப்பார். நான் அக்கறையாக படித்து எல்லாம் சரியாக செய்ததால் இப்போது அவர் உயிரோடு இருக்கிறார். அவருக்கு நான் தான் உயிர் கொடுத்தேன், அவர் சந்தோஷமாக இருக்கிறார்” என்றார்.

அடுத்த நாள் அவரிடம் வேறொரு நோயாளியை அழைத்து வந்தார்கள் அவர் நிலையும் அதேபோலத் தான் இருந்தது. இரண்டு நிமிடம் கவனிக்காமல் இருந்தால் உயிர் போய்விடும். இப்போது டாக்டர் என்ன பிரச்சனை என்பதைச் சரியாக கவனித்து உரிய சிகிச்சை அளித்தார்.

ஆனால் நோயாளி இறந்துவிட்டார். இப்போது அந்த டாக்டர் என்ன சொல்வார்? “எப்படி அற்புதமாக நான் அவரை வழியனுப்பி வைத்தேன்!” என்றா? இல்லை, இது கடவுள் விருப்பம், அந்த நோயாளியின் தலைவிதி, அழைத்து வந்தவர்கள் தாமதமாக வந்துவிட்டார்கள் என்று ஏதோ ஒருவிதத்தில் தட்டிக்கழிப்பார். ஏதோ ஒன்று நினைத்தது போல் நடந்துவிட்டால் அதை “நான் செய்தேன்.” அதுபோல் நடக்கவில்லை என்றால், நான் பொறுப்பில்லை.

நீங்கள் எதையோ இப்படி நடக்க வேண்டுமென்று நினைத்தீர்கள், அது அப்படி நடந்துவிட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு. அது அப்படி நடக்கவில்லை என்றால் எதன்மேல் தட்டிக் கழிக்கலாம் என்று தேட வேண்டியது. ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் எப்பொழுதும் நாம் சொல்வதை எல்லாம் கேட்பதற்கு மேலே ஒரு முட்டாள் இருக்கிறானே, அப்படித்தானே?

நீங்கள் தேர்வு எழுதினீர்கள். மிக நன்றாக எழுதியிருந்தீர்களென்றால், ‘பிரமாதமாக எழுதினேன்’ என்பீர்கள். சரியாக எழுதவில்லை என்றால்?

‘நேரமே போதவில்லை’ என்பீர்கள். ‘பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் வந்துவிட்டன’ என்பீர்கள். அல்லது, வேறு காரணங்கள் தேடுவீர்கள். ஏன்?

வெற்றிக்கு உடனடியாக உரிமை கொண்டாடி பொறுப்பேற்றுக்கொள்ளத் தயாராயிருக்கும் நம் மனம், தவறு நடந்துவிட்டால் மட்டும் அதற்கு வேறு எதைப் பொறுப்பாக்கலாம், என்று அலைபாய்கிறது.

இப்பொழுது உங்கள் வாழ்க்கையில், எதிலாவது ஜெயிச்சா நீங்க பொறுப்பு? நீங்கள் பொறுப்பு எடுக்கிறீர்கள், அப்படித்தானே!

இப்பொழுது நான் என்ன கேட்கிறேன் என்றால், நீங்கள் நினைத்த மாதிரி நடக்கவில்லை என்றாலும், அதற்கும் நீங்கள் பொறுப்பா? இப்பொழுது நடக்காத ஒன்றிற்கு நான் பொறுப்பு என்று உணர்ந்தீர்கள் என்றால், அதை எப்படி நடத்துவது என்ற திறனை நீங்கள் சம்பாதிக்க முடியும். இப்பொழுது உங்கள் திறமைக்கு நீங்கள் பொறுப்பென்றால், உங்களுக்குத் திறமை இல்லாமல் போனதற்கு யார் பொறுப்பு? நீங்கள் தானே?

“நாளை நான் இப்படி இருக்க வேண்டும். என் வாழ்க்கை இப்படி மலர வேண்டும்“ என்று ஆசைபடுகிறீர்களே! இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு “நானே பொறுப்பு” என்று ஏற்க நீங்கள் தயாராக இல்லாவிட்டால், நாளை எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்களால் உருவாக்க முடியுமா என்ன? “இப்போது நான் எப்படி இருக்கிறேனோ, அதற்கு முழுமையாக நானே பொறுப்பு” என்று பார்க்கும் நேர்மை உங்களுக்கு வந்தால்தான், நாளை எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காணும் உரிமை உங்களுக்கு உண்டு.

சரி, இப்போது உண்மையைச் சொல்லுங்கள். இப்போது உங்கள் வாழ்க்கைச் சூழல் எதுவாயிருந்தாலும், மேன்மையாகவோ, மோசமாகவோ, அழகாகவோ, எப்படி இருந்தாலும் சரி, நீங்கள் அதற்கு முழுமையான பொறுப்பா?

உங்கள் பதில் “ஆமாம், நான்தான்” என்றால், வெற்றி பாதையில் நீங்கள் இன்றியமையாத ஒருபடி எடுத்து வைத்துவிட்டீர்கள்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

சிறப்புக் கட்டுரை: சமூகத்திற்கு நாம் எப்படி பயன்படுவது?

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

சனி 7 மே 2022