மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 மே 2022

கேரளாவைத் தொடர்ந்து தஞ்சை: ஷவர்மா சாப்பிட்டவர்களுக்குப் பாதிப்பு!

கேரளாவைத் தொடர்ந்து தஞ்சை: ஷவர்மா சாப்பிட்டவர்களுக்குப் பாதிப்பு!

கேரளாவைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருகே ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த தேவநந்தா என்ற மாணவி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கெட்டுப் போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்தச்சூழலில் தமிழகத்திலும் மதுரை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டு 5 கடைகளில் இருந்து அழுகிய கோழி இறைச்சியைப் பறிமுதல் செய்தனர்.

இன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரமேஸ்வரன் (21), தர்மபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தனர். விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குச் சென்றிருந்த இவர்கள் நேற்று மீண்டும் கல்லூரிக்கு வந்தனர்.

மூவரும் விடுமுறை முடிந்து சந்தித்த நிலையில் ஒரத்தநாடு பிரிவு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இருக்கும் ஒரு துரித உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் விடுதிக்குச் சென்ற அவர்கள் நண்பர்களிடம் ஷவர்மா சாப்பிட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் மூன்று பேருக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனே கல்லூரி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்து 3 மாணவர்களையும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு இரவு முழுவதும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல் ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மூன்று மாணவர்களும் ஷவர்மா சாப்பிட்ட அந்த துரித உணவகத்தை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார்.

இதற்காக வேலை செய்யவரும் கொத்தனார், சித்தாள் மற்றும் உறவினர்களுக்கு நேற்று அறந்தாங்கியில் உள்ள ஏ1 என்ற பிரியாணி கடையில் இருந்து பிரியாணி பொட்டலங்களை வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்.

இதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 27 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் பிரியாணி சாப்பிட்ட மேலும் சிலர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சமீப காலங்களாக ஹோட்டல், உணவகங்களில் சாப்பிடுபவர்களுக்கு இதுபோன்று பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. எனவே இனி இதுபோன்று ஏற்படாதவாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

-பிரியா

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

வெள்ளி 6 மே 2022