மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 மே 2022

நெடுஞ்சாலையில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் - அச்சத்தில் பொதுமக்கள்!

நெடுஞ்சாலையில்  கொட்டப்படும்  மருத்துவக்கழிவுகள் - அச்சத்தில் பொதுமக்கள்!

திருவாரூரில் நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவக்கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் மருத்துவக்கழிவுகளின் உற்பத்தியையும், அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைக்க முடியும். எனவே மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக்கழிவுகளை முறையாக கையாளுவது குறித்து பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கையுறை உள்ளிட்ட பல்வேறு மருத்துவக்கழிவுகள் விதிமுறைகளை மீறி திருவாரூர் அருகே தண்டலை தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்படுகிறது. இந்த மருத்துவக்கழிவுகளால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவக்கழிவுகளை முறையாக அகற்றாமல், மருத்துவ வளாகத்தை விட்டு வெளியில் அதுவும் மக்கள் அதிகம் போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கொட்டுவது நோய்கள் பரவ வழிவகுக்கும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்பட்ட ஊசிகள், சிரஞ்ஜிகள், ரத்த கறை படிந்த பஞ்சுகள் போன்ற, மருத்துவக்கழிவுகளைத் தண்டலை கிராமத்தில்தான் சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவமனை நிர்வாகம் கொட்டி வருவதாகவும், இதனால் எங்கள் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர் இந்தப் பகுதி மக்கள்.

மேலும் இந்தக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் புகை மூட்டம் ஏற்படுவதால் சுவாச பிரச்சினை ஏற்படுவதாகவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது விவகாரம் குறித்து பேசியுள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜா, "திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளோம். தினமும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவக்கழிவுகளை தரம் பிரித்து அள்ளி செல்வார்கள். அவர்கள் அந்த குப்பைகளை எங்குச் சென்று வீசுகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என்கிறார்.

மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட, திருவாரூர் அரசு பொது மருத்துவமனையாலேயே அப்பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது வேதனைதான்.

-ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 4 மே 2022