தமிழகம் முழுவதும் வருகிற 8ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 93 சதவீதமும் 2ஆவது தவணை தடுப்பூசி 77 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 1.5 கோடி பேர் தடுப்பூசி போட தகுதி இருந்தும் போடாமல் இருந்து வருகின்றனர். அவர்களை கண்டறிந்து மாவட்டம் வாரியாக போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத்துறை செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 8ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் முகாம்களை நடத்தாமல் காலையில் இருந்து மதியம் வரை ஒரு பகுதியிலும், பிற்பகல் முதல் மாலை வரை மற்றொரு பகுதியிலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் இருக்கும் பகுதியில் முகாம்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகின்றன.
சென்னையில் தடுப்பூசி போடக்கூடிய தகுதி உள்ளவர்களாக 55 லட்சம் பேர் உள்ளனர். சென்னையை பொறுத்தவரை 2ஆவது தவணை தடுப்பூசி போடாமல் 9 லட்சம் பேர் உள்ளனர். முதல் தவணை 75 ஆயிரம் பேர் போடாமல் உள்ளனர். 2ஆவது தவணை போடக்கூடிய அவகாசம் முடிந்த நிலையில் உள்ளவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு மண்டலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு தடுப்பூசி போடாமல் இருந்து வரும் மக்களுக்கு வீடு வீடாக சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வார்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அவர்களின் பெயர் மற்றும் தடுப்பூசி போடக்கூடிய மையம் போன்றவற்றை குறிப்பிட்டு வருகிற 8ஆம் தேதி சிறப்பு முகாமில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.