160 கிலோமீட்டர் வேகத்தில் 25 புதிய சரக்கு ரயில்கள்!

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் திட்டத்தின் கீழ் புதிதாக சரக்கு ரயில்கள் இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சரக்கு ரயில்கள் அமைக்கும் பணி சென்னை ஐ.சி.எஃப்பில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தச் சரக்கு ரயில், 16 பெட்டிகளைக் கொண்டது. இதில் இரண்டு பெட்டிகளில் குளிரூட்டல் வசதி இருக்கும். 16 பெட்டிகளைக்கொண்ட இந்தப் புதிய சரக்கு ரயில் ஒன்றைத் தயாரிக்க 60 கோடி ரூபாய் செலவாகும். 45 வேகன்கள் கொண்ட சாதாரண சரக்கு ரயிலைவிட இதற்கான செலவு மூன்று மடங்கு அதிகமாகும். இந்தப் புதிய சரக்கு ரயில்களை 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடியும். தற்போதுள்ள ரயில் பாதைகளில் இவ்வளவு வேகத்தில் இந்தச் சரக்கு ரயில்களைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சரக்கு ரயில்கள் 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
புதிய சரக்கு ரயில்கள் பெருநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும். இதன் மூலம் ரயில்வேயில் செல்லும் சரக்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.
டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் புதிய சரக்கு ரயில்கள் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு ரயிலை இயக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய சரக்கு ரயில்கள் மூலம் பயண நேரத்தை பாதியாகக் குறைக்க முடியும் என்பதால் அத்தியாவசிய சரக்குகள் பல இடங்களுக்கு விரைவில் சென்றடையும்.