கிச்சன் கீர்த்தனா: சிக்கன் - வால்நட் ஸ்பைஸி கிரேவி

பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட சிக்கன் உணவுகள் இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது. அந்த வகையில், வீட்டிலேயே ஸ்பெஷலான சிக்கன் - வால்நட் ஸ்பைஸி கிரேவி செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.
என்ன தேவை?
எலும்பில்லாத சிக்கன் - 350 கிராம்
பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பாலக்கீரை விழுது - ஒரு கப்
வால்நட் - அரை கப்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிக்கனை நறுக்கி சுத்தம் செய்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வால்நட் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, பாலக்கீரை விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும். இத்துடன் அரைத்த வால்நட் விழுது சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கிரேவி பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கவும். சூடான சாதம், ரொட்டி, ஃபுல்காவுடன் சிக்கன் - வால்நட் ஸ்பைஸி கிரேவியைப் பரிமாறவும்.