மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஏப் 2022

22 பேர் வழங்கிய நிலம்: முடிவுக்கு வந்த மயான பாதை பிரச்சினை!

22 பேர் வழங்கிய நிலம்: முடிவுக்கு வந்த மயான பாதை பிரச்சினை!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அடையபுலம் கிராமத்தில் மயான பாதைக்கு 22 விவசாயிகள் தங்கள் நிலத்தை தானமாக வழங்கியதையடுத்து 30 ஆண்டுக் காலமாக நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அடையபுலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் யாராவது இறந்துவிட்டால் உடலை தனியார் நிலத்தின் வழியாகத்தான் எடுத்துச்சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இது தொடர்பாக 30 வருடங்களாக பிரச்சினை இருந்து வந்தது.

அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு மயான பாதை பிரச்சினையைத் தீர்த்து வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் என உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி பஞ்சாட்சரம் (வயது 80) இறந்து விட்டார். அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்வதில் பாதை பிரச்சினை இருந்தது. இதையடுத்து அவர்கள் போராட்டம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

தகவல் அறிந்த ஆரணி தாசில்தார் பெருமாள், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இந்திராணி, இல.சீனிவாசன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் மற்றும் சர்வேயர்களுடன் அங்கு விரைந்தனர்.

இதைத் தொடர்ந்து காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் நில உரிமையாளர்களிடம் சமாதான கூட்டம் நடத்தினர். தற்போது மயான பாதைக்கு செல்லக்கூடிய நிலத்தில் பயிரிடாமல் உள்ளதால் சுமார் 22 விவசாயிகள் தங்களது நிலத்தை 3 மீட்டர் அகலத்திலும், 800 மீட்டர் நீளத்துக்கும் மயான பாதைக்காக தானம் செய்வதாக ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனர்.

அதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் மயானத்துக்கு பாதை உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறந்தவர் உடலை புதிய மயான பாதை வழியாக சுடுகாட்டுக்கு காலனி பகுதி மக்கள் எடுத்துச் சென்றனர். இதையடுத்து 30 ஆண்டுக் கால பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்தது.

-ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 24 ஏப் 2022