தமிழகத்தில் முதன்முறையாக இரண்டடுக்கு பஸ் நிறுத்தம்!

தமிழகத்தில் முதன்முறையாக தர்மபுரியில் இரண்டடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கும் பணியை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைத்துள்ளார்.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகில் மின்வாரிய அலுவலகம் முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.68 லட்சத்தில் இரண்டடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது. இதில் முதல் மாடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் முற்றிலும் சோலார் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன. தமிழகத்திலேயே முதன்முறையாக தர்மபுரியில்தான் இந்த இரண்டடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட இருக்கிறது.
இதற்கான பூமி பூஜையை டாக்டர் செந்தில்குமார் எம்.பி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “2 அடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பது திறக்கப்பட்ட உடன் தெரியவரும். இதேபோன்று அரூர், மேட்டூர் பகுதியிலும் 2 அடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
-ராஜ்-