மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஏப் 2022

சண்டே ஸ்பெஷல்: கெட்டியான தயிரும் திரியாத மோர்க்குழம்பும்!

சண்டே ஸ்பெஷல்: கெட்டியான தயிரும் திரியாத மோர்க்குழம்பும்!

கோடையில் மோர்க்குழம்பு பலரின் விருப்ப உணவாகி விடும். ஆனால் அதற்குத் தேவையான கெட்டியான தயிரை வீட்டிலேயே தயாரிக்க முடிவதில்லையே... அதேபோல் மோர்க்குழம்பு வைத்தால் திரிந்து, புளித்துவிடுகிறதே ஏன் என்கிற சந்தேகங்கள் பல இல்லத்தரசிகளுக்கு. இதோ அதற்கான தீர்வு...

அந்த நாள்களில் மீந்துபோன தயிரில் மோர்க்குழம்பு செய்தார்கள். ஆனால், இப்போது நம்முடைய உணவு வகைகளிலேயே ஒன்றாக மோர்க்குழம்பு ஆகிவிட்ட நிலையில் மோர்க்குழம்புக்குக் கெட்டியான தயிரை நாமே தயாரித்து கொள்வது நல்லது.

அதற்கு க்ரீம் அதிகமுள்ள பாலை வாங்கி சிறிதளவு தண்ணீர் மட்டுமே கலந்து காய்ச்சவும். புதிதாக சிறிய தயிர் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொள்ளவும். காய்ச்சி வைத்த பால் வெதுவெதுப்பாக ஆறியதும் இரண்டு கரண்டி பாலை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தயிர்விட்டு ஸ்பூனால் நன்கு கலக்கிக்கொள்ளவும். பிறகு, கலக்கியதை மொத்த பாலிலும் சேர்த்து, இரண்டு முறை ஆற்றி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்தால், கெட்டியான புளிப்பில்லாத, வாசனையான தயிர் கிடைக்கும்.

இந்த தயிருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மெல்லிதான காட்டன் துணியில் வடிகட்டி, மிக்ஸியில் லேசாக அடித்துக்கொள்ளவும்.

கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், தனியா அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன் அனைத்தையும் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடித்து, இத்துடன், சிறிய துண்டு இஞ்சி மற்றும் தேங்காய்க்கீற்றுகள் இரண்டு, பச்சை மிளகாய் இரண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

வெள்ளைப்பூசணி, கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகிய காய்களில் ஏதேனும் ஒன்றில் 150 கிராம் அளவு எடுத்து நறுக்கி, சிறிதளவு தண்ணீர், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

வேகவைத்த காய் மற்றும் அரைத்த கலவை, அடித்துவைத்திருக்கும் தயிர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

முதல் கொதிவந்ததும் இறக்கி, அதில் கடுகு உளுத்தம்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, கறிவேப்பிலை, மல்லித்தழை தூவினால் சுவையான மோர்க்குழம்பு ரெடி.

மோர்க்குழம்பை லேசாகச் சூடு செய்யலாமே தவிர, திரும்பத் திரும்ப கொதிக்க வைத்துப் பயன்படுத்தக் கூடாது.

கூடுதல் டிப்ஸ்:

மோருடன் சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும். கடலைப்பருப்பு வடை மாவு மீதம் இருந்தால், வடைகளாகப் பொரித்து, காய்கறிகளுக்குப் பதிலாக மோர்க்குழம்பில் சேர்த்தால் புதிய சுவையைத் தரும்.

நேற்றைய ஸ்பெஷல்: தாளகம்

.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 24 ஏப் 2022