கல்லூரியில் கூடுதல் கட்டணம்: மாணவர்கள் சாலை மறியல்!

மதுரை நாகமலை பகுதியில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் கல்லூரியான வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, 55 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், மதுரை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இங்கு இளநிலை கலைத்துறை பட்டப்படிப்பிற்கு ஒரு ஆண்டுக்கு 700 ரூபாயும், அறிவியல் துறை பட்டப்படிப்பிற்கு ஆண்டுக்கு 900 ரூபாயும் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது செமஸ்டருக்கு 350 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக, 3,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை வசூலித்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு கூடுதலாக வசூலித்த கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டுமென கல்லூரி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் ஆனால் இதுநாள் வரை பணத்தை திருப்பி தரவில்லை என்றும், இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் பலமுறை முறையிட்டும், கல்லூரி நிர்வாகம் சரியாக பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து கல்லூரி மாணவர் பாலமுருகன் கூறுகையில், “நாங்கள் கூடுதலாக கல்வி கட்டணம் செலுத்தி உள்ளோம், அதற்கான ரசீதை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால், பேங்க் சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று பலமுறை ஒரே காரணத்தை கூறுகிறார்கள், மேலும், அதிக பணம் வசூலிப்பதை கேட்டால், கல்லூரியின் பராமரிப்பு செலவுக்கு வாங்குகிறோம் என்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை முதல்வர் அறையின் முன்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர் ஒருவர் மாணவரை தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசலின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின் மாணவர்கள் கலைந்து சென்றனர்.