மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஏப் 2022

உளுந்து, பச்சைப்பயற்றை அரசு ஒழுங்குமுறைக் கூடங்களில் விற்பது எப்படி?

உளுந்து, பச்சைப்பயற்றை அரசு ஒழுங்குமுறைக் கூடங்களில் விற்பது எப்படி?

திருவாரூர் மாவட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு உற்பத்தி செய்துள்ள விவசாயிகள் இவற்றை, அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யலாம் எனவும், இதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ளுமாறும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்போ, நெல் அறுவடை செய்த பிறகோ உளுந்து மற்றும் பச்சைப்பயறு சாகுபடி செய்வது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், காலப்போக்கில், பல்வேறு காரணங்களால், உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி குறைந்துவிட்டது.

குறிப்பாக, போர்வெல் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கத் தொடங்கியதால், பெரும்பாலான விவசாயிகள் முன்பட்ட கோடை பருவத்தில், நெல் சாகுபடி செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள். இதனால் தமிழ்நாட்டின் உளுந்து, பச்சைப்பயறு தேவையை முழுமையாக நிறைவு செய்ய, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களையே நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவானது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பயறு வகை சாகுபடியை விவசாயிகளிடம் ஊக்கப்படுத்த, தமிழக வேளாண்மைத் துறை, சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்ததோடு, இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டது. விவசாயிகள் உளுந்து, பச்சைப்பயறு உற்பத்தி செய்தால், அவற்றைத் தமிழக அரசே கொள்முதல் செய்து கொள்ளும் என அறிவித்தது. நெல் உற்பத்திக்கான தண்ணீர் தேவை மற்றும் நெல் கொள்முதலில் பல்வேறுவிதமான நெருக்கடிகள் இருப்பதால், விவசாயிகள் இந்த ஆண்டு முன்பட்ட கோடை பருவத்தில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடியில் ஆர்வம் காட்டினார்கள்.

இதனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதல் பரப்பில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அவை தற்போது அறுவடைக்கு வந்துகொண்டிருக்கிறது. உளுந்து, பச்சைப்பயறு வரத்து அதிகரித்துள்ளதால், தனியார் வியாபாரிகள் இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, இவற்றுக்கு குறைந்த விலையே கொடுக்கிறார்கள். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்கள். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு உற்பத்தி செய்துள்ள விவசாயிகள், இவற்றை, அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மூலம் விற்பனை செய்ய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

இம்மாவட்ட விவசாயிகளுக்கு அவர் விடுத்துள்ள அழைப்பில், "திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், நெற்பயிருக்கு அடுத்தபடியாக உளுந்து, பச்சைப்பயறு மற்றும் பருத்தி பயிரிடப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் ராபி 2021-22 பருவத்தில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணைய நிறுவனத்தின் மூலமாக மத்திய அரசால் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதன்மை கொள்முதல் நிலையங்களாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட உள்ளன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உளுந்து 4,500 டன், பச்சைப்பயறு 1,200 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.63 (குவிண்டால் ரூ.6,300), பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 (குவிண்டால் ரூ.7,275) என்ற விலையில் திருவாரூர் விற்பனைக்குழுவுக்கு உட்பட்ட திருவாரூர், மன்னார்குடி, வடுவூர், பூந்தோட்டம் மற்றும் குடவாசல் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவின்போது அசல் சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கான பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்கள் செந்தில்முருகன் (திருவாரூர்) - 9047155282, ஜாய்பெலிக்ஸ் (மன்னார்குடி) - 9943172167, ரமேஷ் (வடுவூர், குடவாசல்) - 9443251041, மேகநாதன் (பூந்தோட்டம்) - 9597697501 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மற்றும் திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் ஆகியோரை அணுகலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

-ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 21 ஏப் 2022