திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி: பேருந்து வசூல் ரூ.1 கோடியே 58 லட்சம்!


சித்ரா பவுர்ணமியையொட்டி விடப்பட்ட சிறப்புப் பேருந்துகளால் திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயணிகளிடம் டிக்கெட் கட்டணமாக ரூ.1 கோடியே 58 லட்சம் வசூலாகியுள்ளது.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலத்துக்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி கடந்த 16ஆம் தேதி அதிகாலை 2.23 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 நிறைவடைந்தது. இதையொட்டி கடந்த 15ஆம் தேதி இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.
இதில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் திருவண்ணாமலைக்கு வருவதற்காகவும் அங்கிருந்து ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்காகவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதன்படி 1,983 சிறப்புப் பேருந்துகள், 5,785 நடைகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் சிரமின்றி கிரிவல பாதைக்கு சென்று வரும் வகையில் நகரின் முக்கிய ஒன்பது சாலை சந்திப்பு பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்களுக்கு செல்ல சற்று சிரமப்பட்டாலும் சிறப்புப் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் பயன் அடைந்தனர்.
இந்த நிலையில் சித்ரா பவுர்ணமிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலம் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்துக்கு மட்டும் டிக்கெட் கட்டணமாக ரூ.1 கோடியே 58 லட்சம் வசூல் ஆகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-ராஜ்-