மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 ஏப் 2022

கோயில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சரிடம் மனு!

கோயில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சரிடம் மனு!

சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி, மல்லூர் அருகே கோயில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்தனர்.

மல்லூர் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி பின்புறம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இதில் பழைமையான மரம் ஒன்றும் அருகில் கருப்பசாமி கோயிலும் உள்ளது. இந்த நிலையில் அந்த நிலத்தை விற்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இதற்காக அங்கிருந்த கருப்பசாமி கோயிலை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு, பழைமையான மரத்தை வெட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். இதை அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் எதிர்த்தனர்.

இதுகுறித்து அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்தை வெட்ட முயன்ற நபர்களிடம் இருந்த எந்திரத்தை பறிமுதல் செய்து மரங்களை வெட்டக் கூடாது என எச்சரித்து அனுப்பினர். இதனிடையே வருவாய் துறையினர் எச்சரித்த பிறகும் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்த மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றியதாக கூறி அங்கிருந்த பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வேறு இடத்தில் அமைக்கப்பட்ட சாமி சிலையைத் திரும்ப கொண்டு வந்து பழைய இடத்திலேயே வைத்து வெட்டப்பட்ட மரங்களின் முன்பு பூஜை செய்து வழிபட்டதுடன், வெட்டப்பட்ட மரத்தை அந்த இடத்திலேயே நட வேண்டும் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பனமரத்துப்பட்டி ஏரியில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமைச்சர் கே.என்.நேரு கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதி சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து அவரிடம் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ராஜ்

.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 17 ஏப் 2022