|காய்கறி கண்காட்சிக்குத் தயாராகும் கோத்தகிரி!

public

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நேரு பூங்காவைக் காய்கறி கண்காட்சிக்குத் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இது கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இந்த பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியின கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோயில் ஆகியவை உள்ளன. நேரு பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழாவையொட்டி தோட்டக்கலைத் துறை சார்பில் முதல் நிகழ்ச்சியாக இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இதில் காட்சிப்படுத்தப்படும் காய்கறிகளால் ஆன பிரமாண்ட சிற்பங்கள், பூங்காவில் பூத்துக்குலுங்கும் அழகிய மலர்கள் உட்பட கண்காட்சியை கண்டுகளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இது மட்டுமின்றி உள்ளூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக பூங்கா விளங்கி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
தற்போது தொற்று குறைந்ததால், இந்த ஆண்டு நேரு பூங்காவில் 11ஆவது காய்கறி கண்காட்சி அடுத்த மாதம் (மே) 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி நேரு பூங்காவைப் பொலிவுபடுத்துவதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பூங்காவைச் சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பூங்காவில் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி, கழிப்பிடங்களைப் புதுப்பிக்கும் பணி, வர்ணம் பூசும் பணி, சிறுவர் பூங்காவில் கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணி ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்களைப் பராமரிக்கும் பணியும், புல்தரைகளை வெட்டி சமன்படுத்தும் பணியும் பூங்கா ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், “நேரு பூங்காவில் பராமரிப்பு பணிகள் மற்றும் பூங்காவை விரிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. காய்கறி கண்காட்சிக்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தயார்படுத்தப்படும்” என்று உறுதியளித்துள்ளனர்.

**ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *