ஈரோட்டில் 4000 ஜவுளி கடைகள் அடைப்பு!


நாடு முழுவதும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் ஜவுளிகளை உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மாதம் ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், காட்டனை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வரக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாநகர் பகுதி முழுவதும் ஜவுளி உற்பத்தி கடைகளும், அதனை சார்ந்த நிறுவனங்கள் என 4 ஆயிரம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடவீதி போன்ற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. கடை முன்பு நூல் விலை உயர்வை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் என்கிற வாசகம் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன், "பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு, ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு மிகப்பெரிய நெருக்கடியாகவும், தொழில் அழியும் அபாயத்தில் தள்ளுகிறது." என்று தெரிவித்தார்.
மேலும், "காட்டன் நூலை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வந்து நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாநகர் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும், அதனை சார்ந்த நிறுவனங்களும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நூல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.
இந்த போராட்டத்தின் காரணமாக 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.