கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்துள்ள காசிநாதபுரம் கிராமத்தின் அருகே எம்.சாண்ட் கல்குவாரி அமைக்கும் பணிக்கு தனியாரால் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடக்கின்றன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே பள்ளி மாணவர்கள், பெண்கள், கிராம மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளா, துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
"குவாரி அமைக்கும் பணிக்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் கூறினர்.
இதற்கு பதிலளித்து பேசியவர்கள், "இது தொடர்பாக முடிவு எட்டவில்லை என்றால் ஆதார், ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம்" என்றனர். நீண்ட நேர சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-ராஜ்-