கிச்சன் கீர்த்தனா: இளநீர் - தர்பூசணி டிலைட்


ஒரு தர்பூசணியில் 92 சதவிகிதம் நீர் இருக்கிறது. அளவு, வடிவம், உள்ளே இருக்கும் சதையின் நிறம், விதைகளின் நிறம், மேல்தோலின் நிறம்... இதையெல்லாம் கொண்டு உலகில் சுமார் 1,200 விதமான தர்பூசணிகள் விளைவதாக வகைப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இந்தியாவிலும் தமிழ்நாட்டில் பத்து வகையான தர்பூசணிகளும் விளைகின்றன. நல்ல எடை கொண்ட பழுத்த தர்பூசணியுடன் இளநீர் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த டிலைட் கோடையைக் குளுமையாக்கும். குழந்தைகளை குஷிபடுத்தும்.
என்ன தேவை?
இளநீர் - 2 கப்
தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள், இளநீர் வழுக்கை - தலா ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாதி அளவு தர்பூசணியை மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கி, 8 கட்டிகள் வரும் விதத்தில் ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் உறைய வைக்கவும். மிக்ஸியில் இளநீர் வழுக்கை, சர்க்கரை, தர்பூசணித் துண்டுகளை சேர்த்து அடித்து... இளநீர், எலுமிச்சைச் சாற்றுடன் நன்றாகக் கலந்து, கிளாஸ்களில் ஊற்றி, ஒவ்வொரு கிளாஸிலும் 2 தர்பூசணி ஐஸ்கட்டிகளை மிதக்கவிட்டால்... இளநீர் - தர்பூசணி டிலைட் ரெடி.