மாணவன் பலி: பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ்!

சென்னையில் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தீக்சித்(7) என்ற மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 28ஆம் தேதி பள்ளி வளாகத்திலேயே வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வேன் ஓட்டுநர், பள்ளி தாளாளர், முதல்வர், பள்ளி பணிப்பெண் என நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநரும், பணிப்பெண்ணும் 15 நாள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக ஆறு கேள்விகளுக்கு 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்கக் கோரி பள்ளி நிர்வாகத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.
தற்போது, இதுதொடர்பாக காவல்துறையும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வேன் மோதி மாணவன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக 10 கேள்விகளுக்கு இரண்டு நாட்களில் பதிலளிக்க பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ்க்கு வளசரவாக்கம் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
-வினிதா