கிச்சன் கீர்த்தனா: பீர்க்கங்காய் கூட்டு

கோடையில் அதிகம் விளையும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான பீரக்கங்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் பல்வேறு விதமான தாது உப்புகள் நிறைந்துள்ளதால், பீர்க்கங்காய் நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் செயல்படும். சளி, ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. புரதச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள் சேர்ந்த சமச்சீர் உணவான பீர்க்கங்காய் கூட்டு நல்ல எனர்ஜியைத் தரும். எல்லோரும் சாப்பிடலாம்.
என்ன தேவை?
பீர்க்கங்காய் - 2
பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 1
கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பீர்க்கங்காயைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, வேகவைக்கவும். பாசிப் பருப்பைக் குழைவாக வேகவைக்கவும். மிக்ஸியில், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவலை நன்றாக அரைத்து, வேகவைத்த பருப்பு, பீர்க்கங்காய், உப்பு சேர்த்து, ஒன்றாகக் கலந்து, கொதிக்கவிடவும். எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து இறக்கவும்.
குறிப்பு: பீர்க்கங்காயில் பஜ்ஜி, அடை, துவையலும் செய்யலாம்.