மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 மா 2022

குமரி கடலில் கண்ணாடி பாலம் - அமைச்சர் எ.வ.வேலு

குமரி கடலில் கண்ணாடி பாலம்  - அமைச்சர் எ.வ.வேலு

‘சுற்றுலா பயணிகள் கடல் அலைகளை கண்டு ரசிக்கும் வகையில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வள்ளுவர் சிலைக்கு கடலில் கண்ணாடி பாலம் அமைக்க முதல்வர் யோசனை தெரிவித்துள்ளார். 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த பால பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்று தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைகள் தனித்தனி பாறைகள் மீது அமைந்துள்ளன.

படகு மூலம் முதலில் விவேகானந்தர் நினைவிடத்துக்கும், பின்னர் அங்கிருந்து படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கும் செல்வது வழக்கம். திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் கடல் பகுதியில் படகுகள் செல்லுவதில் அடிக்கடி சிரமம் ஏற்பட்டு வருகிறது. கடல் நீர்மட்டம் தாழ்வு, சூறை காற்று போன்ற காலங்களில் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவை ரத்துச் செய்யப்படும் நிலையே உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆட்சியில் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்த சமயத்தில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு இணைப்பு பாலம் அமைக்கப்படும் என அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில் பாலம் அமைக்கும் பணிக்கு உயிர்கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கன்னியாகுமரிக்கு வருகை தந்த தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தனி படகில் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, “கன்னியாகுமரி இந்தியாவுக்கே புகழ் சேர்க்கிற சுற்றுலா மையம். இங்கு பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கலைஞர் முதலமைச்சாராக இருந்தபோது திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டது. விவேகானந்தர் பாறைக்குச் சென்று அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு படகில் செல்வதால் நேரம் மற்றும் எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. இதற்காக கடந்த ஆட்சியில் 140 மீட்டர் நீளத்தில் 7.5 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திமுக அரசு 72 மீட்டர் நீளத்தில் 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தி உள்ளார்.

சுற்றுலா பயணிகள் கடல் அலைகளை கண்டு ரசிக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்க முதல்வர் யோசனை தெரிவித்துள்ளார். சமூக நோக்கத்தோடு டெண்டர் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளோம். 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த பால பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று உறுதியளித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

திங்கள் 28 மா 2022