போலி சான்றிதழ்: கொரோனா இழப்பீடு மனுக்களை ஆய்வு செய்ய உத்தரவு!


கொரோனா இறப்பு போலி சான்றிதழ் முறைகேடு குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சில மாநிலங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கைக்கும், இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தோர் எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் காணப்பட்டது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், இழப்பீடு பெறுவதற்கு போலி இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, கொரோனா இழப்பீட்டு திட்டம் தவறாக பயன்படுத்தப்படும் என்று நினைத்து பார்க்கவில்லை. நம்முடைய ஒழுக்கம் இந்தளவு தரம் தாழ்ந்து போகும் என்று நினைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும், மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில்தான் பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்புக்கும், இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது என்று கடந்தமுறை விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று(மார்ச் 24) நடைபெற்ற வழக்கு விசாரணையில், கொரோனா இறப்பு போலி சான்றிதழ் முறைகேடு தொடர்பாக நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதில் “கொரோனா இறப்பு போலி சான்றிதழ் அளித்து இழப்பீடு பெற்ற முறைகேடு விவகாரத்தை மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு விசாரிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா இழப்பீடு கோரி விண்ணப்பிக்கப்பட்ட சான்றிதழ்களில் 5 சதவீதத்தை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதில் யாரேனும் போலி சான்றிதழ் அளித்து விண்ணப்பித்து இருப்பது கண்டறியப்பட்டால், கடும் தண்டனை வழங்கப்படும்.
மேலும் கொரோனா தொற்றால் மார்ச் 28ஆம் தேதி வரை உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசம் 60 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. அதன்பிறகு கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசம் 90 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.
இழப்பீடு திட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. இது ஒழுக்கத்திற்கு எதிரானது மற்றும் நெறிமுறையற்றது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-வினிதா