மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

கோயிலில் கடவுள்தான் விஐபி: உயர் நீதிமன்றம்!

கோயிலில் கடவுள்தான் விஐபி: உயர் நீதிமன்றம்!

கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று(மார்ச் 23) மீண்டும் இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ”கோயிலின் கூட்டத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 60 காவலர்கள் இருந்த இடத்தில் தற்போது 30 காவலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் தரப்பில், "30 ஆயுதப்படை காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவிழா காலங்களில் கூடுதலாக காவல்துறையினர் நியமிக்கப்படுவார்கள். கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதி, ”விஐபி தரிசனம் மூலம் தேவை இல்லாத பல பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். விஐபிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், அவர்களது பொறுப்புக்கானதே தவிர, தனிநபருக்கானது அல்ல. பொறுப்புக்கான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. விஐபிகளின் குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களது உறவினர்களை அனுமதிக்கக் கூடாது.

மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர். கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோயிலின் கட்டளைதாரர்கள் 10 நிமிடம் மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

திருச்சுந்தரர்கள் பக்தர்களை தகாத வார்த்தையில் பேசுவதாக தொடர்ந்து புகார் வருகிறது. இதுபோன்ற சூழலில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலில் வேலை செய்யும் காவல் துறையினர், பணியாளர்கள், பூசாரிகள், திருச்சுந்தரர்கள் பக்தர்களை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.

காவல்துறையினர், வருவாய்த்துறையினர், இந்து அறநிலையத் துறையினர் சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்கக் கூடாது. அவர்களும் பக்தர்களைப் போன்றே நடத்தப்பட வேண்டும். கோயிலின் உள்ளேயும், வெளியேயும் போதுமான அளவு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, “திருச்செந்தூர் கோயில் கடற்கரை முறையாக, தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏதுவாக வழி பலகைகள் வைக்கப்பட வேண்டும். கோயிலின் நாழிக்கிணறு பகுதி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அங்கு உரிய உடைமாற்றும் அறை வசதி போதுமான அளவில் செய்து தரப்பட வேண்டும்.

கோயிலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள பகுதிகள் சுத்தமாக இருப்பதை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும்.

குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும், அன்னதான கூடம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கோயிலில் சிறப்பு அனுமதி சீட்டினை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

மேலும், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோயிலில் 40 ஆயுதப்படை காவல்துறையினரை நியமிக்க வேண்டும். அவ்வப்போது சூழ்நிலைகளைப் பொறுத்து காவல்துறையினரை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி,

இந்த அனைத்து உத்தரவுகளையும் மூன்று வாரத்தில் நடைமுறைப்படுத்த பட வேண்டும். உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 24 மா 2022