மண் குவாரிக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்!

நாகை மாவட்டம் திருமருகல் அருகே மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதியான தோப்புத்திடல் என்ற இடத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மண் குவாரி அமைத்து, அதில் இருந்து எடுக்கப்படும் மண் நாகை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்குப் பயன்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு அந்தக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மண் குவாரி அமைக்கக் கூடாது என அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மண் குவாரிக்கு அமைப்பது தொடர்பாக ஆட்கள் வந்தபோது, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மண் குவாரி அமைக்கப்பட உள்ள இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் மண் குவாரி அமைக்க அனுமதி அளித்ததை ரத்து செய்ய வேண்டும். அனுமதி அளித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-ராஜ்