ஹிஜாப் போராட்டம்: தவ்ஹீத் ஜாமத் நிர்வாகிகள் மீது வழக்கு!

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீதிபதி குறித்து அவதூறு பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 3 பேர் மீது மதுரை தல்லாக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய முறைப்படி அத்தியாவசியமான நடைமுறை அல்ல என்றும் பள்ளி,கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகளும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதியன்று மதுரை மாநகர், தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் பேசிய ஒருவர், “ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலையில் வாக்கிங் போய் கொண்டிருந்த நீதிபதி, பயணிகள் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். நாட்டில் நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்று அனைவரும் கதறினார்கள். எல்லா இடத்திலும் உணர்ச்சிவசப்படுகிற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டதாக நினைக்க வேண்டாம்” என்று கூறிய அவர் அந்த தீர்ப்பை நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்று நீதிமன்றம் குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசிய ஆடியோவை வெளியிட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எங்காவது ஒரு பெரும் சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால், ஏதாவது ஒரு விபத்து, ஏதாவது ஒரு அசம்பாவிதம், ஏதாவது ஒரு கொலை, போன்ற சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால் அதற்கு தீர்ப்பு கொடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பொறுப்பு. இதற்காக என் மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை" என்று பேசியிருந்தார்.
இதற்கு பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரியும், அந்த இயக்கத்தைத் தடை செய்யக் கோரியும் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஒருநபர் பேசும் வீடியோவை ட்வீட் செய்து தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் நீதிபதி குறித்து அவதூறு பேசியதாக கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா ஆகிய மூன்று பேர் மீதும் தல்லாக்குளம் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருக்கும் இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-வினிதா